மனைவி, மாமியாரை தாக்கிய கல்லூரி விரிவுரையாளருக்கு கத்திக்குத்து 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதி


மனைவி, மாமியாரை தாக்கிய கல்லூரி விரிவுரையாளருக்கு கத்திக்குத்து 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 31 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-02-01T01:13:06+05:30)

திருச்செங்கோடு அருகே, மனைவி, மாமியாரை தாக்கிய கல்லூரி விரிவுரையாளருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

எலச்சிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்து உள்ள குமாரமங்கலம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம், தறித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (வயது 48). இவர்களது மகள் அமுதவல்லி (28). இவரும், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த கந்தசாமி (31) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பனங்காடு பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ரிதன்யா (4) என்ற மகளும், மகிழன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

கந்தசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவருக்கும், அமுதவல்லிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அமுதவல்லி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் அவ்வப்போது குடிபோதையில் வந்து குழந்தைகளை தன்னிடத்தில் கொடுக்குமாறு கந்தசாமி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 9.11.2018 அன்று கணவன், மனைவிக்கு இடையே தகராறு முற்றியதில் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் அமுதவல்லி, கந்தசாமி மீது புகார் கொடுத்து உள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி குழந்தை அமுதவல்லியிடமே இருக்க வேண்டும் எனவும், கந்தசாமி இனிமேல் இதுபோல் குடிபோதையில் தகராறு செய்யக்கூடாது எனவும் எழுதி வாங்கி அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அமுதவல்லியின் வீட்டிற்கு வந்த கந்தசாமி ரிதன்யா மற்றும் மகிழன் ஆகியோரை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்று உள்ளார். நீண்ட நேர தகராறுக்கு பின் ரிதன்யாவை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்ற கந்தசாமி, நேற்று மதியம் மீண்டும் அமுதவல்லியின் வீட்டுக்கு வந்து ரிதன்யாவின் உடைகளையும், சிலேட்டு, பலகையையும் கேட்டு உள்ளார்.

அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு முற்றியது. இதை அமுதவல்லியின் தாயார் சாந்தி தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி அந்த பகுதியில் ரோடு போட வைக்கப்பட்டு இருந்த கல்லை எடுத்து தனது மாமியார் சாந்தியை தாக்கியதாகவும், இதனை தடுக்க வந்த அமுதவல்லியையும் கந்தசாமி தாக்கியதாகவும் தெரிகிறது. அப்போது அமுதவல்லி அங்கிருந்த கத்தியை எடுத்து கந்தசாமியை குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் கந்தசாமிக்கு இடது கை மற்றும் இடது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இதன்பேரில் போலீசார் அங்கு வந்து கத்திக்குத்தில் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கந்தசாமி மற்றும் காயம் அடைந்த சாந்தி, அமுதவல்லி ஆகியோரை சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story