விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது


விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2019 11:15 PM GMT (Updated: 31 Jan 2019 7:45 PM GMT)

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை, லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 28). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் சிக்கினார். இதுதொடர்பாக வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விபத்தை ஏற்படுத்திய அந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த மோட்டார் சைக்கிளை கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் மோட்டார் வாகன ஆய்வுக்கு உட்படுத்தி விடுவிப்பது தொடர்பான பரிந்துரைக்கு நவீனிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நவீன், இதுகுறித்து கரூர் லஞ்சஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரையின்பேரில், ரசாயனம் தடவப்பட்ட ரூ.3 ஆயிரத்தை நேற்று வாங்கல் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த, சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதியிடம் நவீன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த திருச்சி லஞ்சஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், ரேகா ஆகியோர் அடங்கிய குழுவினர் ரகுபதியை கையும், களவுமாக பிடித்தனர்.அவர் பெற்ற லஞ்ச பணத்தை போலீசார் பறிமுதல் செய்ததுடன், வாங்கல் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் நீண்ட நேரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர்.

பின்னர் ரகுபதியை கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். லஞ்சம் வாங்கியதாக சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story