இறுதி பட்டியல் வெளியீடு, திண்டுக்கல் மாவட்டத்தில் 17¾ லட்சம் வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு, திண்டுக்கல் மாவட்டத்தில் 17¾ லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 1 Feb 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 17¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 6 ஆயிரத்து 46 மாற்றுத்திறனாளிகளை சேர்த்தனர்.

திண்டுக்கல், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் டி.ஜி.வினய் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

கடந்த செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 7 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் தொடர்பாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. இவை அனைத்தும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் களவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் 8 லட்சத்து 66 ஆயிரத்து 715 ஆண் வாக்காளர்கள், 9 லட்சத்து ஆயிரத்து 984 பெண் வாக்காளர்கள், 154 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 17 லட்சத்து 68 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 35 ஆயிரத்து 269 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுள்ள 16 ஆயிரத்து 827 இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம் 6 ஆயிரத்து 46 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட்டியலில் இதுவரை சேர்க்கப்படாத, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் இருந்தால், 1950 கட்டணமில்லா எண்ணுக்கு அழைக்கலாம். இதுவே செல்போனில் இருந்து அழைக்க வேண்டும் என்றால் 0451-1950 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உரிய படிவத்துடன் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று விவரங்களை சேகரித்து பட்டியலில் அவர்களின் பெயர்களை சேர்ப்பார்கள்.

பொதுமக்கள், வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்களை தெரிவிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும். வாக்காளர் பட்டியல் தொடர்பான கருத்துகள், புகார்கள், சந்தேகங்கள் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்க இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் மனோகர், பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்பிரமணியபிரசாத் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story