இறுதி பட்டியல் வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 5,46,691 வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 5,46,691 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:45 PM GMT (Updated: 31 Jan 2019 8:02 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 691 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியின் பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 344 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 448 வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 40 ஆயிரத்து 792 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் 14 ஆயிரத்து 36 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 358 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 677 பெண் வாக்காளர்களும் மற்றும் 1 இதர வாக்காளரும் உள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக பெரம்பலூர் தொகுதியில் ஆயிரத்து 533 ஆண் வாக்காளர்களும், ஆயிரத்து 775 பெண் வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் ஆயிரத்து 995 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 833 பெண் வாக்காளர்களும் மற்றும் 1 இதர வாக்காளரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது கலெக்டரின் நேர்முக உதவியாளரும் (பொது), வருவாய் கோட்டாட்சியருமான (பொறுப்பு) ராஜராஜன் மற்றும் தாசில்தார்கள், பெரம்பலூர் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Next Story