‘கஜா’ புயலால் சேதமான பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும்


‘கஜா’ புயலால் சேதமான பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Feb 2019 3:45 AM IST (Updated: 1 Feb 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயலால் சேதமான பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக் டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது விவசாயிகள் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பழனியில் உள்ள வரதமாநதி அணை, கணக்கன்பட்டியை அடுத்துள்ள நல்லதங்காள் ஓடை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரை தேக்கி வைக்க அவற்றின் அருகிலேயே தடுப்பணைகளை அமைக்க வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் அமராவதி அணை, பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, சண்முகநதி, நல்லதங்காள் ஓடை, நங்காஞ்சியாறு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் வாய்க்கால் அமைத்து விவசாயத்துக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதும், தற்போது அதற்கான திட்ட விவரம் சேகரிக்கும் பணி (சர்வே) தொடங்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

ஆனால் இந்த திட்டத்தை நங்காஞ்சியாறுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஒட்டன்சத்திரம், மூலசத்திரம், குடகனாறு, மாங்கையாறு, சிறுமலை அடிவாரம் வழியாக நத்தம் வரை வாய்க்கால் அமைக்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாவட்டம் முழுவதும் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. நிலத்தடி நீர்மட்டமும் உயரும். ரூ.60 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் காப்பர் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் நதிநீர் இணைப்பு திட்டத்திலும் காப்பர் குழாய்களை பயன்படுத்தினால் தண்ணீர் வீணாகாது. ‘கஜா’ புயல் நிவாரணம் தொடர்பாக தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை சார்பில் கணக்கெடுப்பு சரிவர மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக சிறுமலை பகுதிகளில் காபி, மிளகு, வாழை உள்ளிட்டவை அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. அவற்றை முறையாக கணக் கெடுத்து விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும்.

வெங்காய பயிர் சேதத்துக்கான காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. கொடைக்கானலில் திசுவாழை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகளுக்கு நுழைவு கட்டணமாக ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் ஒரு மூட்டைக்கு ரூ.5 வசூல் செய்கின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். அதையடுத்து கலெக்டர் கூறுகையில், நதிநீர் இணைப்பு திட்டத்தினை நத்தம் வரை செயல்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மாவட்டம் முழுவதும் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கணக்கெடுக் கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.9¼ கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வெங்காய பயிர் சேதத்துக்கான காப்பீட்டு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் காந்திமார்க்கெட் பிரச்சினையிலும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.

Next Story