சேலம் அருகே, லாரி மோதி விபத்து: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உள்பட 2 பேர் பலி


சேலம் அருகே, லாரி மோதி விபத்து: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 31 Jan 2019 10:30 PM GMT (Updated: 31 Jan 2019 8:35 PM GMT)

சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில், சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீதும் லாரி மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார்கள்.

பனமரத்துப்பட்டி, 

இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் குகை ஆசிரியர் காலனி அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் ரசாக் (வயது 46). இவர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ராசிபுரம் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

மல்லூர் பைபாஸ் அருகே அவர் சென்றபோது எதிரே மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க ரசாக் வண்டியின் வேகத்தை குறைத்து உள்ளார்.

அதேநேரத்தில் பின்னால் வந்த லாரி திடீரென ரசாக்கின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரோட்டை கடக்க முயன்ற மூதாட்டியின் மீதும் லாரி மோதியது. இதையடுத்து லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ரசாக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பலியான மூதாட்டி, பனமரத்துப்பட்டி அருகே உள்ள நத்தமேடு அருந்ததியர் காலனியை சேர்ந்த பழனியம்மாள் (65) என்பதும், மல்லூரில் உள்ள துணிக்கடையில் துணி எடுப்பதற்காக அவர் சென்றதும் தெரியவந்தது.

மூதாட்டி உள்பட 2 பேர் பலியான இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story