இறுதி பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 28,61,881 வாக்காளர்கள் 5 தொகுதிகளில் பெண்கள் அதிகம்


இறுதி பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 28,61,881 வாக்காளர்கள் 5 தொகுதிகளில் பெண்கள் அதிகம்
x
தினத்தந்தி 31 Jan 2019 11:15 PM GMT (Updated: 2019-02-01T02:35:26+05:30)

சேலம் மாவட்டத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 28 லட்சத்து 61 ஆயிரத்து 881 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (பழங்குடியினர், தனி), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ரோகிணி வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2019-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முழு ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமுறை திருத்தத்தில் 66 ஆயிரத்து 53 வாக்காளர்கள் பெயர் புதிதாக சேர்க்கப்பட்டும், 38 ஆயிரத்து 229 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகளில் 14 லட்சத்து 31 ஆயிரத்து 687 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 30 ஆயிரத்து 76 பெண் வாக்காளர்களும், 118 இதர வாக்காளர்களும் என மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 881 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். கெங்கவல்லி தொகுதியில் 5 ஆயிரத்து 577 பெண் வாக்காளர்களும், ஆத்தூர் தொகுதியில் 6 ஆயிரத்து 971 பெண் வாக்காளர்களும், ஏற்காடு தொகுதியில் 4 ஆயிரத்து 26 பெண் வாக்காளர்களும், சேலம் வடக்கு தொகுதியில் 5 ஆயிரத்து 147 பெண் வாக்காளர்களும், சேலம் தெற்கு தொகுதியில் 4 ஆயிரத்து 663 பெண் வாக்காளர்களும் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், சேலம் உதவி கலெக்டர் செழியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story