காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை சாவதற்கு முன்பு நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல்


காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை சாவதற்கு முன்பு நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2019 3:45 AM IST (Updated: 1 Feb 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு இந்த பரிதாப முடிவை தேடிக் கொண்டார்.

திருச்சி,

திருச்சி மன்னார்புரம் காஜாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது 23). சரக்கு ஆட்டோ டிரைவர். விஜய், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனி அசோக்நகரை சேர்ந்த கீர்த்திகாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் அவருக்கு குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த விஜய், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போன் வாட்ஸ்-அப்பில் தான் சாகப்போவதாக நண்பர்களுக்கு விஜய் தகவல் அனுப்பி உள்ளார். அதனை கண்ட நண்பர்கள் பதறி அடித்து கொண்டு வீட்டுக்கு வந்தனர். ஆனால் அதற்குள் அவர் தூக்குபோட்டு உயிரை மாய்த்துகொண்டதை அறிந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். 

Next Story