திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் நவீன எந்திரம் மூலம் தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்


திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் நவீன எந்திரம் மூலம் தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 1 Feb 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் வழியாக செல்லும் திண்டுக்கல்- கரூர் நான்கு வழிச்சாலையில் நவீன எந்திரம் மூலம் தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வேடசந்தூர்,

காஷ்மீர்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை வேடசந்தூர் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் செம்மடையில் இருந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வரை 77 கிலோ மீட்டர் ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலையை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மதுக்கான் என்ற தனியார் நிறுவனம் 2009-ம் ஆண்டு அமைத்தது. இதையடுத்து கரூர் மாவட்டம் வேலன்செட்டியூரில் சுங்கச்சாவடி அமைத்து 20 வருடங்கள் வசூலித்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசிடம் ஒப்பந்தம் போடப்பட்டு சாலையை நிர்வகித்து வந்தது.

இந்நிலையில் இந்தசாலை குண்டும், குழியுமாக மாறியதால் அதிகளவு விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டது.

எனவே 10 வருடத்திற்கு பிறகு தற்போது பல கோடி ரூபாய் செலவில் 77 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே இருந்த பழைய சாலையை நவீன எந்திரம் மூலம் குறிப்பிட்ட அளவு தோண்டி எடுத்து அதன் மேல் எந்திரம் உதவியுடன் புதிதாக தார்சாலை அமைக்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முதல் வேடசந்தூர் வரை சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பகுதியில் பணி முடிந்தவுடன் கரூர் மாவட்ட பகுதியில் நடைபெற உள்ளது.

வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டியில் உள்ள 4 வழிச்சாலையில் இருந்து காக்காத்தோப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு பகுதிகளிலும் சர்வீஸ் சாலை உள்ளது. இச்சாலை மண் சாலையாகவே உள்ளது. இதை தார்சாலையாக மாற்றினால் கிராம மக்கள் பயன்பெறுவார்கள். விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதால் சர்வீஸ் சாலையை தார் சாலையாக மாற்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் 4 வழிச்சாலையை நிர்வகித்து வரும் மதுக்கான் தனியார் நிறுவனத்திடம் வலியுறுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
1 More update

Next Story