திருப்பூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து உளுந்து கொள்முதல் செய்யப்படும்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து உளுந்து கொள்முதல் செய்யப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர்,
வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2017-1018-ம் ஆண்டில் விவசாயிகள் உற்பத்தி செய்த உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயிறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் விலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2017-2018-ம் நிதியாண்டின் ராபி பருவத்தில் 1548 மெட்ரிக் டன் உளுந்து மற்றும் 2018-2019 காரீப் பருவத்தில் 365 மெட்ரிக் டன் பச்சை பயறும் கொள்முதல் செய்யப்பட்டது.
இதன் மூலம் 1767 விவசாயிகள் நேரடியாக பயனடைந்ததோடு, வெளி மார்கெட்டில் இத்தகைய பயறுவகைகளின் சந்தை விலை உயர்ந்ததால் அனைத்து பயறு விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்தது. இதேபோல நடப்பு ஆண்டு ரபி பருவத்திலும் பயறு வகை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து, பச்சை பயறு மற்றும் துவரை போன்ற பயறுவகைகளை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நியாயமான சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.56-க்கு உளுந்து கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை ஒழுங்குமுறை விற்பனைகூடம் முதன்மை கொள்முதல் முகமையாக செயல்படும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகி அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயறு வகை விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்க வேண்டும். என்பதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தில் உளுந்து சாகுபடி விவசாயிகள் பயன்பெறலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story