‘இந்திய-இத்தாலிய கலப்பினம் தான் ராகுல் காந்தி’ மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே மீண்டும் சர்ச்சை கருத்து
‘இந்திய-இத்தாலிய கலப்பினம் தான் ராகுல்காந்தி’ மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை மந்திரியாக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. இவர் அரசியலமைப்பை மாற்றுவோம் என்றும், அதை மாற்றுவதற்கு என்றே நாங்கள் இங்கே வந்துள்ளோம் என்றும் கூறினார். இது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எழுத்தாளர்களுக்கு தந்தை யார் என தெரியாது என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள் என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கினார். இதனை விமர்சித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவை பற்றி நீங்கள் முஸ்லிம் பெண்ணின் பின்னால் ஓடியவர் என்பது மட்டுமே எனக்கு தெரியும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்திய-இத்தாலிய கலப்பினம்
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பற்றி கருத்து தெரிவித்து மீண்டும் அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சையில் சிக்கியுள்ளார். உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி தாலுகா பதனகோடு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், ‘இந்திய-இத்தாலிய டி.என்.ஏ. சேர்ந்த கலப்பினம் தான் ராகுல் காந்தி. இந்த கலப்பினம் காங்கிரஸ் ஆய்வுக்கூடத்தை தவிர உலகத்தில் வேறு எந்த ஆய்வுக் கூடத்திலும் கிடைக்காது.
அவர் ரபேல் விமான கொள்முதலை தவறாக எடுத்துக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். ராகுல்காந்தி ஒன்றும் அறியாத அரசியல்வாதி. ராகுல்காந்தியின் தாத்தா போரஸ் காந்தி பார்சி இனத்தை சேர்ந்தவர். அவருடைய தாய் சோனியா காந்தி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது ராகுல்காந்தி மட்டும் எப்படி பிராமணர் ஆக முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆதரிக்கவில்லை
மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அனந்தகுமார் ஹெக்டேவின் இந்த சர்ச்சை கருத்து குறித்து பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் புட்டசாமி கூறுகையில், ‘ஹெக்டேவின் கருத்தை நான் ஆதரிக்கவில்லை. ஹெக்டேவின் சர்ச்சை கருத்துகளுக்கு கட்சி மேலிடமும், மூத்த தலைவர்களும் எச்சரித்தும் அவர் இன்னும் தனது செயல்பாட்டை மாற்றாமல் உள்ளார்’ என்றார்.
Related Tags :
Next Story