கட்சிரோலியில் 6 வாகனங்களுக்கு தீவைப்பு நக்சலைட்டுகள் அட்டகாசம்

கட்சிரோலியில் 6 வாகனங்களுக்கு தீவைத்து நக்சலைட்டுகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
கட்சிரோலி,
கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நக்சலைட்டுகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து போலீஸ் உளவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை அவர்கள் கடத்தி கொலை செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் 5 பேரை கொன்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கட்சிரோலி மாவட்டம் கோர்சி தாலுகாவில் உள்ள தொங்கர்காவ் பகுதிக்குள் நுழைந்த நக்சலைட்டுகள் 12 பேர் அங்கு கட்டிட பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள், லாரி என 6 வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தினர். இதில் அனைத்து வாகனங்களும் தீயில் கருகி சாம்பலாகின.
சாலை துண்டிப்பு
மேலும் குர்கேதா- கோசி- சிக்கேத் சாலையில் மரங்களை வெட்டி போட்டு சாலையை துண்டித்தனர். அப்பகுதிகளில் இருந்து நக்சலைட்டுகள் வீசிச்சென்ற துண்டு பிரசுரங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி மாதம் 25 முதல் 31-ந் தேதி வரை நக்சலைட்டுகள் இயக்கத்தால் நக்சல் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நக்சலைட்டுகள் கூட்டங்கள் நடத்தி பிரசாரம் மேற்கொள்வது, புதிய உறுப்பினர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ப்பது, சாலைகள் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்துவது, பாதுகாப்பு படை வீரர்களை தாக்குவது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






