விரைவில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை கலெக்டர் வீரராகவராவ் தகவல்


விரைவில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை கலெக்டர் வீரராகவராவ் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:15 AM IST (Updated: 1 Feb 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

விரைவில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

தொண்டி,

திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் சுமன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், கூட்டுறவு இணை பதிவாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் திருவாடானை தாசில்தார் சேகர் வரவேற்றார்.

முகாமில் 47 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 பேருக்கு விலையில்லா சலவை பெட்டிகள், 10 பேருக்கு கடன் உதவிகள், 4 பேருக்கு வேளாண் இடுபொருட்கள், 2 பேருக்கு டிராக்டர், 219 பேருக்கு திருமண நிதி உதவி உள்பட 327 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரத்து 481 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

அப்போது பொதுமக்கள் சார்பில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதிவாணன், திருவாடானை தாலுகா வெள்ளையாபுரத்தில் ஜமாத் இளைஞர்கள் சார்பில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் சொந்தமாக ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளனர். ஆனால் தண்ணீர் உப்புத்தன்மை கொண்டதாக உள்ளதால் இதனை சுத்திகரிப்பு செய்து குடிநீராக மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வெள்ளையாபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத்தர வேண்டும். இதன் மூலம் இந்த ஊராட்சி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் கடந்த 3 ஆண்டுகளாக திருவாடானை தாலுகாவில் பருவமழை சரியாக பெய்யாததால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக 2017-18-ம் ஆண்டிற்குரிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் திருவாடானை தாலுகாவில் உள்ள ஓரியூர் ஊராட்சி புல்லக்கடம்பன், பனஞ்சாயல் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் புதிதாக ஆழ்குழாய் அமைத்து இந்த ஊராட்சிகளில் சீரான குடிநீர் வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல தேவகோட்டையில் இருந்து ஓரியூர் செல்லும் சாலையில் வெள்ளையபுரம்-மருதவயல் இடையே சுமார் 2½ கிலோ மீட்டருக்கு புதிதாக தார்ச்சாலை அமைத்துதர வேண்டும். இதேபோல பழுதடைந்த பல்வேறு சாலைகளை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:- வெள்ளையபுரத்தில் அடுத்த மாதம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். விரைவில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். கோடையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் குடிநீர் தேவையறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடம் பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பரக்கத் அலி, அப்பாவு, மோகன்ராஜ், அய்யப்பன், ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் புலியூர் வெங்கடேசன், பரக்கத் அலி, மருதவயல் மோகன், கூட்டுறவு சங்க தலைவர் ஓரியூர் மகாலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், நம்பு ராஜேஷ், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story