காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் வங்கி பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

போரிவிலியில் காதலிக்க மறுத்ததால் வங்கி பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை வால்கேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் குணால் (வயது22). டிராவல் ஏஜென்சி ஊழியர். இவர் பயந்தரில் வசித்து வரும் வங்கி ஊழியரான 22 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் குணாலின் காதலை ஏற்கவில்லை என தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் குணால், பெண்ணிடம் பேச வேண்டும் என கூறி அவரை போரிவிலி சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு எதிரே உள்ள ஓம்கரேஷ்வர் பாலத்திற்கு அழைத்தார். அதன்பேரில் அந்த பெண்ணும் அங்கு வந்தார்.
அங்கு வைத்து அவர் தன்னை காதலிக்குமாறு பெண்ணை வற்புறுத்தி உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கத்தியால் குத்தினார்
இதில் ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணை கழுத்தில் குத்தினார். மேலும் முகத்தில் வெட்டினார். பின்னர் அவர் தனது வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு கழுத்தையும் அறுத்து கொண்டார். இதில் படுகாயமடைந்த இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற கஸ்தூர்பா போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு காந்திவிலி சதாப்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் குணால் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்க மறுத்த பெண்ணை வாலிபர் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் போரிவிலியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






