உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அரியலூரில் மாநில தேர்தல் ஆணையர் பேச்சு


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அரியலூரில் மாநில தேர்தல் ஆணையர் பேச்சு
x
தினத்தந்தி 1 Feb 2019 10:30 PM GMT (Updated: 1 Feb 2019 4:01 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அரியலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் பேசியதாவது:-

ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பாக வார்டு மறுவரையறை அமைக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்க ஏதும் அவசிய தேவை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு சிறப்பாக நடத்துவதற்கு ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய துறைகள் சார்ந்த அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்கு பெட்டிகள், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் பணிகளை திறன்பட மேற்கொண்டிட தக்க நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரம், வாக்குச் சீட்டு மற்றும் வாக்குப் பதிவு பொருட்களையும், அரியலூர் நகராட்சி, திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய அலுவலகங்களில் இருப்பு அறையிலுள்ள சட்டமுறையான படிவங்கள், சட்ட முறையில்லா படிவங்கள், அறிவுரை கையேடுகள் மற்றும் வாக்குப் பெட்டிகளையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) லதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story