சென்னை எழும்பூர் மேல்நிலைப்பள்ளியில் புதிய செயலி மூலம் மாணவிகள் வருகைப்பதிவு


சென்னை எழும்பூர் மேல்நிலைப்பள்ளியில் புதிய செயலி மூலம் மாணவிகள் வருகைப்பதிவு
x
தினத்தந்தி 2 Feb 2019 4:30 AM IST (Updated: 2 Feb 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூர் மேல்நிலைப்பள்ளியில் ‘பேஸ் டேக்’ என்ற புதிய செயலி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவு எடுக்கப்படுகிறது.

சென்னை,

அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவை துல்லியமாக கணக்கிடவும், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகள் எவை? என்பதை அறியவும் ‘பேஸ் டேக்’ என்ற புதிய செயலியை (அப்ளிகேஷன்) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகளில் கொண்டு வர பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது.

அதன்படி, ‘பேஸ் டேக்’ செயலியில் மாணவ-மாணவிகளின் புகைப்படம், பெயர் மற்றும் விவரங்கள், ரத்த பிரிவு, ஆதார் எண் ஆகியவை பதிவிடப்பட்டது. இதற்காக பிரத்தியேகமாக ஒரு கேமரா பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் பொருத்தப்பட்டு, அதன் வழியாக உள்ளே வரும் மாணவ-மாணவிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களின் வருகை துல்லியமாக பதிவு செய்யப்படும்.

முதற்கட்டமாக சில பள்ளிகளில் இந்த திட்டத்தை சோதனை முறையில் நடை முறைப்படுத்தவும், சில பள்ளிகளில் அன்றாட பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தவும் தொடங்கி இருக்கின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டம் அன்றாட பயன்பாட்டில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி நுழைவுவாயில் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, அதின் உள்ளே வரும் மாணவிகளின் வருகை ‘பேஸ் டேக்’ செயலியில் பதிவாகிறது.

இந்த வருகைப்பதிவை யாரும் மாற்ற முடியாது. எப்போது வேண்டுமானாலும் எடுத்து பார்க்கலாம். இதில் பதிவாகும் வருகைப்பதிவு பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோரின் பார்வைக்கு செல்கிறது.

இந்த திட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒருவர் கூறுகையில், ‘பேஸ் டேக்’ செயலியில் பதிவாகும் வருகைப்பதிவு மிகவும் துல்லியமாக இருக்கிறது. மாணவ- மாணவிகளின் வருகைப்பதிவு மட்டுமல்ல பள்ளிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய புகைப்படமும் அதில் பதிவாகும். இது பள்ளிக்கு பாதுகாப்பாகவும் அமைகிறது’ என்றார்.

Next Story