ரெட்டிவலசையில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 40 பேர் காயம்
ரெட்டிவலசை கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 40 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டிவலசை கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. விழாவில் திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு, மிட்டூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.
விழாவில் கால்நடைகளை டாக்டர்கள் சத்யா, காஞ்சனா ஆகியோர் பரிசோதனை செய்தனர். 6 காளைகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி (வயது 60), குண்டுரெட்டியூரை சேர்ந்த பெரியண்ணன் (56), நிம்மியப்பட்டு கிராமத்தை சேர்ந்த கருப்பன் (32), மரிமாணிகுப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் (17), மிட்டூரை சேர்ந்த பிரபு (26) ஆகியோார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஆண்டியப்பனூர் சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி தலைமையில், மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக காளை விடும் விழாவில் காளை ஒன்று குறைந்த நேரத்தில் ஓடியதாக கூறி பரிசு வழங்க வேண்டும் என காளையின் உறவினர்களும், மேலும் சில காளைகள் மீண்டும் ஓடவிட வேண்டும் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை குரிசிலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாச்சார்குப்பம், ரெட்டிவலசை, கொல்லகொட்டாய் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story