அரசின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட இளம் கலைஞர்களுக்கு நிதி உதவி
அரசின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட இளம் கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
இது குறித்து சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஹேமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இளம் கலைஞர்களை தன்னார்வ கலை நிறுவனங்கள் வழியாக கலை நிகழ்ச்சி வழங்கும் திட்டத்தின் கீழ், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, கதாகாலட்சேபம், நாதசுரம், தனி வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் ஆகிய இசைக்கருவிக் கலைஞர்களுக்கம், பக்கவாத்யங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்திட நிதி உதவி வழங்கப்படும்.
இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்கும் கலைஞர்கள் 7.1.2019 அன்று 16 வயது நிரம்பியவராகவும், 30 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஏற்கனவே இத்திட்டத்தில் பயன்பெற்றவர்களுக்கு மீண்டும் இப்பிரிவில் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
கடிதம் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவோர் சுய முகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான அஞ்சல் வில்லையை ஒட்டி, உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பொன்னி, 31 பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை www.tne-i-nm.in என்ற இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 27-ந் தேதியிலோ அல்லது அதற்கு முன்னரோ மன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த வாய்ப்பை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம் கலைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story