நூதன முறையில் முதியவரிடம் ரூ.34 ஆயிரம் மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார்


நூதன முறையில் முதியவரிடம் ரூ.34 ஆயிரம் மோசடி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார்
x
தினத்தந்தி 1 Feb 2019 11:00 PM GMT (Updated: 1 Feb 2019 7:07 PM GMT)

முதியவரிடம் நூதன முறையில் ரூ.34 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு மேட்டுப்பாளையம் பஸ்நிறுத்தம் பங்களா வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). இவர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

நான் சில தினங்களுக்கு முன்பு எனது சொந்த ஊருக்கு சென்றேன். அங்கு கடந்த ஜனவரி மாதம் 31–ந்தேதி ஏ.டி.எம். மையத்திற்கு சென்று செலவுக்காக பணம் எடுத்தேன். அப்போது பணம் இல்லை என்ற தகவல் வந்தது. இதையடுத்து எனது மகன் வீரனிடம் கொடுத்து வங்கி கணக்கு புத்தகத்தை வங்கிக்கு சென்று பதிவு செய்தேன். அப்போது அதில் ரூ.312 மட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ரூ.34 ஆயிரம் பணம் டிசம்பர் மாதம் எனது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

கடந்த டிசம்பர் மாதம் 17–ந்தேதி எனக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி ஒருவர் எனது ஆதார் எண், ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி.எண் உள்ளிட்டவற்றை என்னிடம் கேட்டார். எனக்கு படிப்பறிவு இல்லாததால் நான் அனைத்தையும் அந்த நபரிடம் கூறிவிட்டேன். மீண்டும் அதே மாதம் 18–ந்தேதி என்னிடம் தகவல் கேட்டார்.

அப்போதும் தகவல் கொடுத்து விட்டேன். இந்த தகவல்களை வைத்து கொண்டு, நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.34 ஆயிரம் நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டிருந்தது தற்போது தான் தெரியவந்துள்ளது. இதனால் இதன் மீது நடவடிக்கை எடுத்து நூதன முறையில் பணத்தை எனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து மோசடி செய்த அந்த மர்ம ஆசாமியை கைது செய்ய வேண்டும். பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story