நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து இறந்த அர்ச்சகர் குடும்பத்தினருக்கு அமைச்சர் தங்கமணி ஆறுதல்


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து இறந்த அர்ச்சகர் குடும்பத்தினருக்கு அமைச்சர் தங்கமணி ஆறுதல்
x
தினத்தந்தி 2 Feb 2019 3:45 AM IST (Updated: 2 Feb 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து இறந்த அர்ச்சகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் தங்கமணி ஆறுதல் கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் விடுமுறை நாட்களில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வருவது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினத்தன்று ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வந்தார்.

இங்கு 8 அடி உயரத்தில் பலகையில் நின்று கொண்டு ஆஞ்சநேயருக்கு மலர்மாலை அணிவித்து கொண்டு இருந்தபோது, அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்நிலையில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அர்ச்சகர் வெங்கடேசன் தவறி விழுந்த இடத்தை பார்வையிட்டு அர்ச்சகர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அர்ச்சகர்கள் சம்பவத்தை அமைச்சர் தங்கமணியிடம் விளக்கி கூறினர்.

இதையடுத்து அமைச்சர் தங்கமணி, அர்ச்சகர் வெங்கடேசனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பணியாற்றிய அர்ச்சகர் வெங்கடேசன் தவறி விழுந்து இறந்தார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும்படி தமிழ்நாடு முதல்-அமைச்சர் கூறி இருந்தார். அதன்பேரில் நானும், நாமக்கல் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கரும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி உள்ளோம்.

எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நடக்காமல் இருப்பதற்கு இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும். அதேபோல் வெங்கடேசனின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குமாறு கேட்டு உள்ளார்கள். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர்கள் வெங்கடேஷ், ரமேஷ் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story