தபால் தலை கண்காட்சி: மாணவர்கள் பேனா நட்பை தொடங்க வேண்டும் கோபால் கிருஷ்ண காந்தி அறிவுரை


தபால் தலை கண்காட்சி: மாணவர்கள் பேனா நட்பை தொடங்க வேண்டும் கோபால் கிருஷ்ண காந்தி அறிவுரை
x
தினத்தந்தி 1 Feb 2019 11:00 PM GMT (Updated: 1 Feb 2019 8:45 PM GMT)

மாணவர்கள் பேனா நட்பை தொடங்க வேண்டும் என்று கோபால் கிருஷ்ண காந்தி கூறினார்.

புதுச்சேரி,

மகாத்மா காந்தியின் 150–வது பிறந்த ஆண்டை கொண்டாடும் விதமாக இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் சார்பில் ‘‘காந்திபிக்ஸ் 2019’’ என்ற தலைப்பில் அஞ்சல் தலை கண்காட்சி முத்தியால்பேட்டை சுபலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் கவர்னருமான கோபால் கிருஷ்ண காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகாத்மாகாந்தி, பாரதி மற்றும் அரவிந்தரை சித்தரிக்கும் ஒரு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். அதனை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் தலைவர் சம்பத் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து கோபால் கிருஷ்ண காந்தி பேசியதாவது:–

இந்திய தபால் துறையில் பணியாற்றும் தபால்காரர்கள் மிகப்பெரிய வேலையை செய்து வருகின்றனர். நல்ல செய்தி, துக்க செய்தி என்று தெரியாமல் தங்களிடம் வரும் கடிதங்களை குறிப்பிட்ட நபரிடம் சென்று சேர்த்து வருகின்றனர். அதுபோல் பண ஆணையையும் சென்று சேர்க்கின்றனர். இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் அவர்கள் கடவுளின் தூதுவனாக செயல்படுகின்றனர். ஏழை பெற்றோர் அளிக்கும் பணம் இவர்கள் மூலம்தான் கல்வி கற்கும் பிள்ளைகளிடம் சென்று அடைகின்றது.

தற்போதுள்ள தபால் நிலையங்கள் மேம்படுத்த வேண்டும். அதாவது மார்பிள், கிரானைட், இரும்பு கம்பிகள் அமைத்து மேம்படுத்த வேண்டும் என நான் சொல்லவில்லை. முன்பு தபால் அலுவலகங்களில் பசை ஒட்டும் இடம் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். ஆனால் தற்போது அதுபோல் இல்லை. அவைகளை நல்ல நிலையில் மேம்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று சொல்கின்றேன்.

இணையதளம் வருவதற்கு முன்பு பேனா நட்பு அதிகம் இருந்தது. அதாவது வெளியூர், வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்களை பேனாவால் எழுதும் கடிதம்மூலம் தொடர்பு கொண்டு வந்தனர். ஆனால் இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து பேனா நட்பு இல்லாமல் போய்விட்டது. இ மெயில் கடிதம் எழுதி, அவை உடனுக்குடன் கிடைத்தாலும் கைப்பட எழுதியதுபோன்ற உணர்வுடன் அந்த கடிதங்கள் இருக்காது. மேலும் வைரஸ் போன்றவைகளால் அந்த கடிதங்கள் அழிந்து போகவும் வாய்ப்பு உண்டு. ஆனால் பேனாவால் எழுதும் கடிதம் ஒருகாலமும் அழியாது. எனவே மாணவர்கள் மீண்டும் பேனா நட்பை தொடங்க வேண்டும்.

அதுபோல் வரும் கடிதங்களை தபால் உறையுடன் பாதுகாத்து வரவேண்டும். காந்தி சுதந்திர போராட்டத்தில் தபால் துறை, ரெயில் துறையும் புறக்கணிக்காமல் பிற அனைத்து துறைகளையும் புறக்கணித்து போராட்டம் நடத்தினார். ஏனென்றால் அவை இரண்டும்தான் மக்களுக்கு மிகப்பெரிய சேவைகளை செய்து வந்தன. மேலும் காந்தி தனக்கு வரும் கடித உறைகளை பிரித்து மறுபக்கத்தில் எழுதி பயன்படுத்துவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சியில் காந்திக்காக இந்தியாவிலும், பிற நாடுகளிலும் வெளியிடப்பட்ட சுமார் 10 ஆயிரம் அஞ்சல் தலைகள் மற்றும் 3 ஆயிரம் முதல் நாள் அட்டைகள்(ஒருநாள் மட்டும் வெளியிடப்படும் அட்டை), 200க்கும் மேற்பட்ட பிரேம்களில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 81 அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள், 35 பள்ளி மாணவர்கள் தங்கள் அஞ்சல் தலை சேகரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த கண்காட்சி இன்று(சனிக்கிழமை)யும், நாளை(ஞாயிற்றுக்கிழமை)யும் நடைபெறும்.


Next Story