திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தனியார் அட்டை குடோனில் தீ ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தனியார் அட்டை குடோனில் தீ ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 1 Feb 2019 9:30 PM GMT (Updated: 1 Feb 2019 9:18 PM GMT)

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தனியார் அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

திருச்சி,

திருச்சி பெரியகடைவீதி பகுதியை சேர்ந்தவர் லலித்குமார் ஜெயின். இவர் திருச்சி காந்திமார்க்கெட் மகாலெட்சுமிநகர் 3-வது வீதியில் பழங்கள் மற்றும் பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் அட்டை தயாரிக்கும் குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் குடோனையும், அலுவலகத்தையும் பூட்டிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணி அளவில் குடோனில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு அட்டை தயாரிக்க பயன்படுத்தும் காகிதங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ மள,மளவென வேகமாக பரவியது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மாவட்ட அலுவலர் ராமமூர்த்தி உத்தரவின்பேரில், நிலைய அலுவலர் லியோ ஜோசப் தலைமையில் தீயணைப்புவீரர்கள் வாகனத்தில் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் குடோனில் இருந்த பொருட்கள் மற்றும் கார் ஒன்று எரிந்து நாசமானது. சுமார் 4 மணிநேரம் போராடி அதிகாலை 4.30 மணி அளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் அங்கு சென்று விபத்து ஏற்பட்ட குடோனை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் சதி செயலா? என தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் கார் உள்பட ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story