கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Feb 2019 11:15 PM GMT (Updated: 1 Feb 2019 9:23 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இதில் ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில்,“கோமகுடி, சங்கேந்து போன்ற நடவு பகுதிக்கு பெருவளையில் தண்ணீர் திறந்து விட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் 52 இடங்களில் திறக்க வேண்டும். குடிமராமத்து பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக செலவு செய்து பணிகளை முடிக்க வேண்டும். மானாவாரி மேலாண்மை திட்டத்தை மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும். மின்மாற்றி பழுதுகளை சரிசெய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடப்பதை தடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

த.மா.கா. விவசாயிகள் அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் பேசுகையில், “காவிரியின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும். வயலூர் முருகன் கோவில் முதல் பேரூர் வரை தார்சாலை அமைக்க வேண்டும். கஜா புயலால் மாவட்டத்தில் நெல் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. 100 சதவீதம் முழுமையாக வளர்ச்சியடையாமல் தரம் சற்று குறைந்துள்ளது. இதனை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆந்திர பொன்னி நெல் ரகம் அரசால் தடை செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் பெருமளவு சாகுபடி செய்வதில்லை. இருப்பினும் தனியார் நிறுவனங்கள் ஆந்திர பொன்னி ரக நெல் விதைகளை விற்று வருவதை தடை செய்ய வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்” என்றார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “பழங்குடியினர், சீர்மரபினர் வசிக்கும் சூரியூரில் விவசாயம் மற்றும் நீர் ஆதாரங்களை அழிக்கும் வகையில் தொடங்கப்படும் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது. இல்லையென்றால் போலீஸ் நிலையத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும். லால்குடி காட்டூர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை டி.ஜி.பி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். விதை கடலையை கொடுத்து சாகுபடி செய்தபின் கடலையை உப்பிலியபுரம் வேளாண்மை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். எனவே கடலையை வாங்க உத்தரவிட வேண்டும். விவசாயிகளின் டிராக்டர், பொக்லைன் எந்திரங்கள் ஆண்டு கணக்கில் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்தில் பிடித்து வைக்கப்பட்டிருப்பதை விடுவிக்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை திரும்ப செலுத்த ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கஜா புயல், வறட்சி நிவாரணத்தை வழங்க வேண்டும்” என்றார்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் துணை செயலாளர் சுப்ரமணியம் பேசுகையில்,“ 17 பாசன வாய்க்கால்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தூர்வார வேண்டும். கட்டளைமேட்டு வாய்க்கால்களின் கரையை அகலப்படுத்தியும், உயர்த்தியும் தரப்படுத்த வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது” என்றார்.

விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் பேசுகையில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வாழைகள், இதர பயிர்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. உப்பிலியபுரம், புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் படை புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார். இதேபோல விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெல்களை அயிலை சிவசூரியன் எடுத்து வந்து கலெக்டரிடம் காண்பித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசுகையில், “மாவட்டத்தில் 25 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தெந்த இடங்களில் தேவை என்றால் கூடுதலாக திறக்கப்படும். கஜா புயல் நிவாரணம் முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. யாரேனும் விடுபட்டிருந்தால் தெரிவியுங்கள், அது பற்றி பார்ப்போம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளின் கடன்களை செலுத்த கோரி வங்கிகள் மிரட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடன் காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. குடிமராமத்து பணிகளுக்கு ரூ.110 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்டத்தில் 15 ஆயிரத்து 328 ஹெக்டேர் மக்காச்சோளப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கிராவல் மண் எடுக்க அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்றார்.

கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகளுக்கு கலெக்டர் ராஜாமணி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பால்ராஜ், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கஜா புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story