மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது குமாரசாமி பேட்டி


மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2019 3:21 AM IST (Updated: 2 Feb 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

மத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட் ஒவ்வொருவருக்கும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. இது தேர்தல் பட்ஜெட் என்று பொருளாதார நிபுணர்களே கூறியுள்ளனர். பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் குறித்து எந்த தகவல்களையும் கூறவில்லை. விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். இதை என்னவென்று சொல்வது?.

கர்நாடக அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் மோடி, ‘லாலிபாப்’ என்று கூறினார். அப்படி என்றால் விவசாயிகளுக்கு வழங்கும் தலா ரூ.6 ஆயிரம் திட்டத்தை ‘காடன் கேன்டி’ என்று அழைக்கலாமா?. இந்த பட்ஜெட்டில் எந்த தெளிவும் இல்லை.

கர்நாடகத்திற்கு என்ன செய்தது?

இந்த பட்ஜெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவை இல்லை. மத்தியில் புதிதாக வரும் அரசு, புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தன. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன்.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு, கர்நாடகத்திற்கு என்ன செய்தது?. இந்த பட்ஜெட் நிதித்துறையில் தயாரிக்கப்பட்டதா? அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தபோது அதை பா.ஜனதா குறை கூறியது.

12 கோடி விவசாயிகள்

நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மட்டும் விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.48 ஆயிரம் கோடியை நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம்.

கடந்த 4½ ஆண்டுகளில் எதுவும் செய்யாத மோடி, அடுத்த 4 மாதங்களில் என்ன செய்ய முடியும்?. அனைத்து மாநில கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. இது மோடிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story