புனேயில், தவறான சிகிச்சையால் சிறுமி பலி: 16 மாதத்துக்கு பிறகு டாக்டர் கைது


புனேயில், தவறான சிகிச்சையால் சிறுமி பலி: 16 மாதத்துக்கு பிறகு டாக்டர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2019 10:19 PM GMT (Updated: 1 Feb 2019 10:19 PM GMT)

தவறான சிகிச்சையால் சிறுமி பலியான சம்பவத்தில் 16 மாதத்துக்கு பிறகு டாக்டர் கைது செய்யப்பட்டார்.

புனே,

புனேயை சேர்ந்தவர் அருண் போர்டே. ஆந்திர பிரதேசத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 13 வயதில் பிரட்னயா என்ற மகள் இருந்தாள். 8-ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள்.

சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்த அவளுக்கு டாக்டர் பபன் ஜாதவ் என்பவர் சிகிச்சை அளித்தார். காய்ச்சலுக்காக அவர் சிறுமிக்கு ஊசிபோட்டார்.

மறுநாள் ஊசி போட்ட இடம் கறுப்பாக மாறி காயம் ஏற்பட்டது. அது உடல் முழுவதும் பரவி அவளது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவள் மேல்சிகிச்சைக்காக இன்னொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்குள் சிறுமி உயிரிழந்தாள்.

டாக்டர் கைது

பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்ததும், ஊசி உடலில் தவறான இடத்தில் போடப்பட்டு இருந்ததும் தான் அவளது சாவுக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஹிஞ்சேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டாக்டர் பபன் ஜாதவ் மீது நடவடிக்கை எடுப்பதற்காக புனே சசூன் அரசு ஆஸ்பத்திரி நிபுணர் குழுவை நாடினர்.

அவர்கள் அண்மையில், இது தொடர்பாக அறிக்கையை போலீசிடம் சமர்ப்பித்தனர். அதில், டாக்டரின் அலட்சியம் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக குறிப்பிட்டு இருந்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர். இதையடுத்து போலீசார் 16 மாதத்துக்கு பிறகு தற்போது டாக்டர் பபன் ஜாதவை அதிரடியாக கைது செய்தனர்.

Next Story