அமர்சிங்குக்கு ராக்கி கயிறு கட்டியும் எங்களை பற்றி தவறாக பேசுகிறார்கள் நடிகை ஜெயப்பிரதா வேதனை


அமர்சிங்குக்கு ராக்கி கயிறு கட்டியும் எங்களை பற்றி தவறாக பேசுகிறார்கள் நடிகை ஜெயப்பிரதா வேதனை
x
தினத்தந்தி 2 Feb 2019 3:59 AM IST (Updated: 2 Feb 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

அமர்சிங்குக்கு ராக்கி கயிறு கட்டினேன். ஆனாலும் எங்களை பற்றி மக்கள் தவறாக பேசுகிறார்கள் என்று நடிகை ஜெயப்பிரதா வேதனை தெரிவித்தார்.

மும்பை,

புகழ்பெற்ற நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் ஜெயப்பிரதா. இவர் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது வாழ்வில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங் உடனான தொடர்பு குறித்த வதந்தி, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களை வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியதாவது:-

தற்கொலை முடிவு

அமர்சிங் ரத்த சுத்திகரிப்பு செய்யவேண்டிய நிலைக்கு ஆளானார். அந்த சமயத்தில் எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் சமூக வலை தளங்களில் பரவியது.

இதுகுறித்து தெரிந்ததும் நான் கதறி அழுதேன். இனிமேலும் வாழக்கூடாது என தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவுக்கு தள்ளப்பட்டேன். யாரும் எனக்கு உதவி செய்ய முன்வராததால் தனிமையில் தள்ளப்பட்டேன்.

அந்த நேரத்தில் அமர்சிங் சிகிச்சையில் இருந்து வெளியே வந்து, எனக்கு ஆதரவாக நின்றார். இந்த சமயத்தில் நீங்கள் அவரை பற்றி என்ன நினைப்பீர்கள்? கடவுளாகவா அல்லது வேறு யாராவதாகவா? அவருக்கு நான் ராக்கி கயிறு கட்டினேன். மக்கள் எங்களை தவறாக பேசுவதை நிறுத்தி விட்டார்களா? மக்கள் பேசுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை.

திராவகம் வீச்சு மிரட்டல்

அரசியலில் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய போர் இந்த ஆணாதிக்க நடைமுறைதான். நான் எம்.பி.யாக பதவியேற்ற பின்னரும் போராட்டம் ஓயவில்லை. சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அசாம் கான் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார். அவர் என் மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்தார். அடுத்த நாள் நான் உயிருடன் இருப்பேனா என உத்தரவாதமும் இல்லை. நான் வீட்டை விட்டு கிளம்பும்போது எனது தாயிடம், நிச்சயமாக வீடு திரும்புவேனா என்று தெரியாது என கூறிவிட்டு தான் செல்வேன்.

‘மணிகர்ணிகா’ படத்தில் வருவதுபோல தேவைப்படும் நேரத்தில் பெண்கள் துர்க்கை அவதாரத்தை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story