லோக் அயுக்தா நீதிபதி எப்படி தனது முதலாளியை விசாரிப்பார்? சிவசேனா கேள்வி

லோக் அயுக்தா நீதிபதி எப்படி தனது முதலாளியான முதல்-மந்திரியை விசாரிப்பார் என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரே, மத்தியில் லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மராட்டியத்தில் புதிய சட்டத்தின் படி லோக்அயுக்தாவை அமைக்கவும் வலியுறுத்தி தனது சொந்த கிராமமான அகமத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் கடந்த புதன்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் மராட்டியத்தில் நடைமுறையில் உள்ள லோக்அயுக்தா அமைப்புக்கு முதல்-மந்திரியையும் விசாரிக்கும் அதிகாரம் வழங்கி மராட்டிய மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று தலையங்கம் வெளியிடப்பட்டு இருந்தது.
அதில் கூறியிருப்பதாவது:-
எப்படி விசாரிக்க முடியும்?
லோக்அயுக்தாவின் கீழ் இனி முதல்-மந்திரியையும் விசாரிக்க முடியும் என்பது நல்லது தான். ஆனால் கேள்வி என்னவென்றால், லோக்அயுக்தா நீதிபதியை நியமிப்பது முதல்-மந்திரி தான். அவர் தனது முதலாளியான முதல்-மந்திரியை, எப்படி விசாரிக்க முடியும்?
தேர்தலில் போட்டியிடவும், வெற்றி பெறவும் அதிக பணம் தேவைப்படுகிறது. முதல்-மந்திரி பதவியை பிடிக்க குதிரை பேரம் நடக்கிறது. இந்த பணத்தை அவர் வியர்வை சிந்தி சம்பாதிக்க முடியாது. மறைமுகமாக மேஜைக்கு கீழே தான் இந்த பணத்தை வசூலிக்க முடியும்.
விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கான சரியான விலை கூட கிடைப்பதில்லை. ஆனால் சாமியார்கள் ஆட்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கின்றனர். ஏன் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு மட்டும் பணம் கொடுக்கிறார்கள்?
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு கைப்பாவையாகவே தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. ஊழலை முடிவுக்கு கொண்டுவரும் லோக்அயுக்தா இன்னும் பிறக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






