வெவ்வேறு விபத்துகளில் இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.70 லட்சம் நஷ்ட ஈடு


வெவ்வேறு விபத்துகளில் இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.70 லட்சம் நஷ்ட ஈடு
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 1 Feb 2019 10:37 PM GMT)

வெவ்வேறு விபத்துகளில் இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.70 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த ஆச்சாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவருடைய மகன் முத்து (வயது 19). ஏ.சி.மெக்கானிக். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-1-2017 அன்று முத்து இருசக்கர வாகனத்தில் சென்னை தி.நகரில் உள்ள போத்தீஸ்மேம்பாலம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் முத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முத்துவின் பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.10 லட்சத்து 88 ஆயிரத்து 400 வழங்குமாறு திருச்சியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

தஞ்சை பூக்காரத்தெரு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (27). ரெயில்வே ஊழியர். இவர் கடந்த 6-10-2017 அன்று தஞ்சை- சிதம்பரம் சாலையில் வைத்தீஸ்வரன்கோவில் அருகே நத்தம் மெயின்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மணிகண்டனின் பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.48 லட்சத்து 68 ஆயிரத்து 506 வழங்குமாறு சிதம்பரம் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மேலஉதிரங்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகன் முகிலன் (22). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 31-8-16 அன்று மோட்டார்சைக்கிளில் அகரஓகை என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த முகிலனை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் இறந்தார்.

இது குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முகிலனின் பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் விசாரித்து ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 600 வழங்குமாறு கும்ப கோணம் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த 3 விபத்துகளில் இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு ரூ.70 லட்சத்து 4 ஆயிரத்து 506 வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story