பெட்டமுகிலாளம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
பெட்டமுகிலாளம் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், கெலமங்கலம் ஊராட்சியில் உள்ள மலை கிராமமான பெட்டமுகிலாளம் ஊராட்சியில் உள்ள பழையவூர் தொலுவாபெட்டா கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, இளம் வயது திருமணம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து கிராம அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமை தாங்கி பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடத்தப்பதற்கான காரணிகள் மற்றும் சூழ்நிலைகள், அந்த பெண் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். மேலும், பெண் சிசு கொலை முற்றிலுமாக தடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுக்கு குழந்தைகள் தேவையில்லையெனில் அந்த குழந்தைகளை சட்ட ரீதியாக தத்து அளிக்கலாம். சமூகத்தில் குழந்தைகளின் நிலையை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை சமூகம் சார்ந்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.
மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா பேசுகையில், மலைவாழ் கிராமங்களில் பள்ளி இடைநிற்றலை தடுக்கும் வகையில் உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி தொடர இல்லத்தில் சேர்ந்து, தங்கி கல்வி படிக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்றார். மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் வின்சென்ட் சுந்தர்ராஜ் பேசுகையில், மலை கிராமத்தில் உள்ள குழந்தைகள் சார் பிரச்சினைகளை உடனடியாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் குழந்தைகள் நலக்குழும உறுப்பினர் கலாஜோதிமணி, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட கள அலுவலர் பாலசந்திரன், தொண்டு நிறுவன சமூக சேவகர் கிரிஜா, மாவட்ட குழந்தைகள் பாதகாப்பு அலகின் பணியாளர்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் திருப்பதி, சைல்டு லைன் ஒன்றிய பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் குழந்தைகள் சார் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முடிவில், பெட்டமுகிலாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தை ஏசு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story