நாமக்கல் மாவட்டத்தில் 57 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அங்கன்வாடி மைய நியமன ஆணையை திரும்பப்பெற வேண்டும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


நாமக்கல் மாவட்டத்தில் 57 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அங்கன்வாடி மைய நியமன ஆணையை திரும்பப்பெற வேண்டும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 Feb 2019 10:58 PM IST (Updated: 2 Feb 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 57 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அங்கன்வாடி மைய நியமன ஆணையை திரும்பப்பெற வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராசிபுரம், 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரம் டவுன் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பாலமுரளி முன்னிலை வகித்தார். நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் மோகன்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருக.செல்வராசன் ஜாக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்தும், மாநில தலைமை நிலைய செயலாளர் பழனிசாமி இயக்க செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.

கூட்டத்தில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பள்ளி ஆசிரியர்களை விரோதியாக பாவித்துக்கொண்டு மேற்கொண்டுவரும் அனைத்து வகையான பழிவாங்கும் நடவடிக்கைகளையும் கல்வி களத்தின் அமைதி கருதி திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். மத்திய நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்விக்கும், தொடக்க கல்விக்கும் போதுமான அளவில் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய நிதிநிலை அறிக்கையில், படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றி முன்னுரிமை அடிப்படையில் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள், சிறை சென்ற ஆசிரியர்கள், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ள ஆசிரியர்கள் என பாதிக்கப்பட்டு உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்ட செயற்குழு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது. மத்திய அரசு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முயற்சியை கைவிட வேண்டும். மத்திய அரசு தனி நபர் வருமான வரிவிலக்கினை ரூ.8 லட்சமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் 57 அங்கன்வாடி மைய எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி நியமித்து உள்ளதை மாவட்ட செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கன்வாடி மைய நியமன ஆணையை நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க நிர்வாகி பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story