வேலூர் மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத 42 பள்ளிகளுக்கு நோட்டீஸ் முதன்மை கல்வி அலுவலர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத 42 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.
வேலூர்,
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காத பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். அதன்படி உரிமம் புதுப்பிக்காத பள்ளிகள் குறித்து மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டது.
அதில், வேலூர் மாவட்டத்தில் 42 பள்ளிகள் உரிமம் புதுப்பிக்காமல் இயங்குவது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 227 மெட்ரிக் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், பள்ளிகளின் உரிமம் புதுப்பிக்காத 27 மெட்ரிக் பள்ளிகள், 15 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 42 மெட்ரிக் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளித்து, பள்ளியின் உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story






