கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற காதல் மனைவி கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது


கள்ளக்காதலை கண்டித்த கணவரை கொன்ற காதல் மனைவி கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2019 11:15 PM GMT (Updated: 2 Feb 2019 6:45 PM GMT)

கள்ளக்காதலை கண்டித்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றார் காதல் திருமணம் செய்த மனைவி. பிரிந்து சென்றவரை வரவழைத்து தீர்த்து கட்டிய அவரையும், அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

மதுரை மாவட்டம் மாரனவாரியேந்தல் கிராமம் திருமால்புரத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி. இவருடைய மகன் இளஞ்செழியன்(வயது28). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 2012-ம் ஆண்டு கட்டிட வேலைக்காக தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டைக்கு வந்தார். அங்கு கட்டிட மேஸ்திரியான சரவணனிடம் வேலை பார்த்து வந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இதனால் சரவணன் தனது வீட்டிற்கு இளஞ்செழியனை அடிக்கடி அழைத்து சென்றார்.

அப்போது சரவணனின் உறவினர் ரேவதியுடன்(26) இளஞ்செழியனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் ரேவதி குடும்பத்திற்கு தெரியவந்ததால் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இருவரையும் கண்டித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தர்மபுரிக்கு சென்றனர். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு நித்தியாஸ் என பெயர் சூட்டி சந்தோஷமாக வாழ்க்கை நடத்திய நேரத்தில், இளஞ்செழியனுக்கு கட்டிட வேலை சரிவர கிடைக்கவில்லை. இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டதால் இளஞ்செழியன் தனது சொந்த ஊருக்கு மனைவி, குழந்தையை அழைத்து சென்றார்.

அங்கு அவர்களுக்கு வரவேற்பு இல்லை. எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால் அவர்களை இளஞ்செழியனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி அம்மாப்பேட்டைக்கே திரும்பி வந்தனர். ஆனால் அங்கும் அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அங்கு ரேவதியின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன்காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு இளஞ்செழியன்-ரேவதி தம்பதியினர், தஞ்சைக்கு வந்தனர். தஞ்சை வண்டிக்கார தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து அவர்கள் தங்கினர். தஞ்சையில் கட்டிட வேலைக்கு சென்றபோது அம்மாப்பேட்டை அருகே பொட்டுவாச்சாவடியை சேர்ந்த இளவாளனுடன்(26), இளஞ்செழியனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனால் இளஞ்செழியன் வீட்டிற்கு இளவாளன் அடிக்கடி வந்து சென்றார். அப்போது ரேவதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுவே கள்ளக்காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த விஷயம் இளஞ்செழியனுக்கு தெரிய வந்ததால் அவர் தனது மனைவியையும், நண்பரையும் கண்டித்தார். இருந்தாலும் இருவரும் தொடர்பை கைவிடவில்லை. இந்த சம்பவத்தால் இளஞ்செழியனை கட்டிட வேலைக்கு அழைத்து செல்வதை இளவாளன் தவிர்த்து விட்டார். இதனால் சரிவர வேலை கிடைக்காததால் கஷ்டப்பட்ட இளஞ்செழியன் தனது சொந்த ஊருக்கு சென்று வேலை பார்த்தார்.

வீட்டில் கணவர் இல்லாததால் இளவாளனை அடிக்கடி வீட்டிற்கு வரவழைத்து அவருடன் ரேவதி நெருக்கமாக இருந்து வந்தார். வாரம் அல்லது மாதம் ஒரு முறை மனைவி, குழந்தையை பார்க்க தஞ்சைக்கு வரும் இளஞ்செழியனுக்கு மனைவியும், நண்பரும் நெருங்கி பழகும் தகவல் தெரிந்து ஆத்திரம் அடைந்தார்.

இதனால் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்தார். எவ்வளவோ எடுத்துக்கூறியும் மனைவி திருந்தாததால் மீண்டும் அவர் சொந்த ஊருக்கு சென்று விட்டார். அதுமட்டுமின்றி தஞ்சைக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார். வீட்டிற்கு பணம் அனுப்புவதையும் அவர் நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு(2018) ஜனவரி மாதம் 13-ந் தேதி தனது கணவரை போனில் தொடர்பு கொண்ட ரேவதி, நான் திருந்தி விட்டேன். நமக்குள் இனிமேல் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சேர்ந்து வாழ்வோம். பொங்கல் பண்டிகைக்கு தஞ்சைக்கு வாருங்கள். அப்பாவை பார்க்க வேண்டும் என மகனும் ஆசைப்படுகிறான் என கூறினார். இதை உண்மை என்று எண்ணி, மனைவி திருந்திவிட்டதாக நம்பிய அவர் தஞ்சைக்கு வந்தார்.

அங்கு அவரை சந்தித்த இளவாளன், தான் தவறு செய்து விட்டதாகவும், தன்னை மன்னித்துவிடும்படியும் கூறியதுடன் தன்னுடன் சேர்ந்து மது குடிக்க வேண்டும் என கூறி இளஞ்செழியனை அழைத்துள்ளார். இதையடுத்து இளஞ்செழியன், இளவாளன், அவரது நண்பர் அரித்துவாரமங்கலத்தை சேர்ந்த கலியபெருமாள்(26) ஆகிய 3 பேரும் சேர்ந்து ரேவதியின் வீட்டில் வைத்தே மது குடித்தனர்.

அப்போது மதுபோதையில் இருந்த இளஞ்செழியனை, ரேவதி அவரது கள்ளக்காதலன் இளவாளன், கலியபெருமாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து துண்டால் கழுத்தை இறுக்கினர். இதில் மூச்சுத்திணறி இளஞ்செழியன் பலியானார். பின்னர் அவரது உடலை போர்வையால் சுற்றி ஒரு சாக்கில் வைத்து கட்டினர்.

அந்த உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்கவோ, எரிக்கவோ செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். உடலை கொண்டு செல்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பருத்திவிடுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணியின்(33) உதவியை நாடினர். அவரும் நள்ளிரவு ஆட்டோவுடன் ரேவதியின் வீட்டிற்கு வந்தார். பின்னர் இளஞ்செழியன் உடலை போர்வையால் சுற்றி 3 பேரும் தூக்கிக் கொண்டு ஆட்டோவுக்கு வந்தனர்.

ஆட்டோவில் உடல் வைக்கப்பட்டவுடன் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சையை அடுத்த மின்னாத்தூர் ஏரியை நோக்கி சென்றனர். செல்லும் வழியில் மின்னாத்தூர் வாய்க்கால் பாலத்தை பார்த்த அவர்கள், ஆட்டோவை பாலத்தின் அருகே நிறுத்தினர். இளஞ்செழியன் உடலை தூக்கி பாலத்திற்கு கீழ் தண்ணீர் செல்வதற்காக போடப்பட்டிருந்த சிமெண்டு குழாய்க்குள் வைத்து உள்ளே திணித்து விட்டு அங்கிருந்து வந்து விட்டனர். பின்னர் எதுவும் நடக்காதது போல் அனைவரும் தங்களது வேலையை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சைக்கு சென்ற மகன் நீண்டநாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த இளஞ்செழியனின் தாயார் தங்கம்மாள் தனது மகனின் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி தங்கம்மாள் புகார் செய்தார்.

அதன்பேரில் காணவில்லை என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் பல நாட்கள் ஆகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனுவை இளஞ்செழியனின் தாயார் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இளஞ்செழியனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என அம்மாப்பேட்டை போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். இளஞ்செழியனின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை எல்லாம் ஆய்வு செய்தனர்.

அப்போது ரேவதியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனது கணவரை கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து ரேவதி, இளவாளன், கலியபெருமாள், மணி ஆகிய 4 பேரையும் அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களை மின்னாத்தூர் வாய்க்காலுக்கு அழைத்து சென்று இளஞ்செழியன் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தை போலீசார் பார்வையிட்டனர். அப்போது போர்வை, சாக்கினால் சுற்றப்பட்டு இருந்த அவரது உடல் வெறும் எலும்புக்கூடாக காணப்பட்டது.

இதையடுத்து நேற்று பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எலும்புக்கூடாக காணப்பட்ட இளஞ்செழியனின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.

கள்ளக்காதலை கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்த கணவரை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story