கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய பெண் மாயம் கண்டுபிடித்து தர கோரிக்கை


கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய பெண் மாயம் கண்டுபிடித்து தர கோரிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2019 3:30 AM IST (Updated: 3 Feb 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய பெண் மாயமானார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என அவரது மகள்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் பூமிக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் பராமரிப்பு பணி நடை பெற்றது. இந்த பணியை நிறுத்த வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் அந்த பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் பேராசிரியர் ஜெயராமன், ராஜூ ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நேற்று கதிராமங்கலம் அய்யனார் திடலில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்தும், பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்க்ள, பேராசிரியர் ஜெயராமன், ராஜு உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

பெண் மாயம்

நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராமங்கலத்தை சேர்ந்த கலையரசி(வயது 40), ஜெயந்தி(41), ஜெயராமனின் மனைவி சித்ரா (55) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கலையரசியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் அவருடைய 3 மகள்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த சம்பவம் கதிராமங்கலம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story