திருச்சி காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


திருச்சி காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Feb 2019 4:45 AM IST (Updated: 3 Feb 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உள்ள காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு அவர் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

திருச்சி,

திருச்சி கிராப்பட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதல் அணி உள்ளது. அங்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளின்போது, சிறப்பு காவல்படையில் பயிற்சி பெற்ற போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்வது வழக்கம். அங்கு பணியாற்றும் போலீசார் அங்கேயே தங்கி கொள்ள குடியிருப்பு வசதியும் உள்ளது.

இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வனத்திராயன்பட்டியை சேர்ந்த முத்து (வயது 26) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறப்பு காவல்படையில் தங்கி பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை 8 மணிக்கு முத்து வழக்கம்போல் டிபன் சாப்பிட வரவில்லை.

இதனால் அவருடன் பணியாற்றும் நண்பர்கள் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அறையின் கதவை நண்பர்கள் தட்டினர். நீண்டநேரமாக தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்தனர். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு முத்து தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை கீழே இறக்கினர். அப்போது அவரது கழுத்து பாட்டிலால் அறுக்கப்பட்ட நிலையில் உடைகள் முழுவதும் ரத்தக்கறையாக இருந்தது.

மேலும், அந்த அறையில் உள்ள வாஷ்பேஷினில் ரத்தம் சிதறி கிடந்தது. இதனால் முத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததும், ஆனால் அவ்வாறு செய்து கொள்ள சிரமமாக இருந்ததால் பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று முத்துவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து முத்து தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு அவர் உருக்கமாக எழுதி வைத்து இருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

என்னுடைய இன்ப துன்பங்களை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாய்ப்பாசத்துக்காக ஏங்கிய நான் இன்னும் எனது அண்ணனை மட்டுமே தாயாக கருதுகிறேன். என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. என் மனம் என்ன செய்கிறது என்று தெரியாமல் நிலை தடுமாறிவிட்டது. எனக்கு புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளது. அதனால் என் மனம் எதையுமே உணராத நிலையை அடைந்து விட்டது. நான் எடுக்கும் இந்த முடிவால் எனது குடும்பத்துக்கு சிக்கல் ஏற்படும் என உணர்ந்துள்ளேன். ஆனால் என்னால் முடியவில்லை. எனது இறுதிச்சடங்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடத்துங்கள். தயவுசெய்து காவலர்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடவும், காவலர்கள் ஆறுதல் பெறவும், அவர்களும் வாழ நேரம் ஒதுக்கித் தருமாறும் முதல்-அமைச்சரை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

காவலர்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி வைத்து இருப்பதால் பணிச்சுமை காரணமாகவும், அதிகாரிகள்அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முத்துவின் சகோதரர் கொடுத்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

வழக்கமாக முத்து இரவு நேரத்தில் காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறைக்கு வந்து தூங்குவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அவர் அறைக்கு வரவில்லை என்றும், விடியற்காலையில் தான் அவர் அறைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் நள்ளிரவு எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சியில் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story