மாவட்ட செய்திகள்

தா.பேட்டை அருகே குடிபோதையில் தாயை வெட்டிக் கொன்ற மகன் + "||" + The son who killed the mother in the drunken neighborhood near Thaeta

தா.பேட்டை அருகே குடிபோதையில் தாயை வெட்டிக் கொன்ற மகன்

தா.பேட்டை அருகே குடிபோதையில் தாயை வெட்டிக் கொன்ற மகன்
தா.பேட்டை அருகே குடிபோதையில் தாயை வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
தா.பேட்டை,

திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த திருத்தலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 65). கணவனை இழந்தவர். இவரது மகன் ராஜா (36) சென்னையில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். ராஜாவுக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடும்பத்தோடு வசித்தபோது, கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி ராஜாவை பிரிந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனியாக சென்றுவிட்டார். இதனால் ராஜா தனது சொந்த கிராமத்திற்கு வந்து தாயாருடன் வசித்து வந்தார். ராஜாவிற்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, தாய் பச்சையம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு ராஜா மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த தாய் பச்சையம்மாளிடம், ராஜா மீண்டும் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் போதையில் இருந்த ராஜா என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தாயை வெட்டினார். அதுமட்டுமின்றி பச்சையம்மாளின் தலையை பிடித்து சுவற்றில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

குடிபோதையில் இருந்த ராஜா அதே வீட்டில் படுத்து தூங்கினார். பச்சையம்மாள் தினமும் அதிகாலையில் எழுந்து, வீட்டின் முன்பு தண்ணீர் தெளிப்பது வழக்கம். நேற்று காலையில் ராஜா மட்டும் எழுந்து வீட்டில் இருந்து வெளியே வந்தார். இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் ராஜாவிடம் பச்சையம்மாளை எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாதததால் ஆஸ்பத்திரிக்கு கூட்டிசெல்லவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பச்சையம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீத்தாராமன், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பச்சையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். குடிபோதையில் பெற்ற தாயை மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.