பெண்ணாடத்தில் வீடுகளில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய மின்மோட்டார்கள் பறிமுதல் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


பெண்ணாடத்தில் வீடுகளில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய மின்மோட்டார்கள் பறிமுதல் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2019 10:45 PM GMT (Updated: 2 Feb 2019 8:05 PM GMT)

பெண்ணாடத்தில் வீடுகளில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய மின்மோட்டார்களை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு கொடுத்து, பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சிலர் தங்களது வீடுகளில் மின்மோட்டார்களை பொருத்தி, குடிநீரை உறிஞ்சி வந்ததாக தெரிகிறது. இதனால் பேரூராட்சி பகுதியில் அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைக்கவில்லை. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள், பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் இளங்கோவன் உத்தரவின்பேரில் குறிஞ்சிப்பாடி மற்றும் கங்கைகொண்டான் பேரூராட்சி பணியாளர்கள் செந்தில், ஆறுமுகம், சுரேஷ், சகாதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் பெண்ணாடம் பேரூராட்சியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, 25 வீடுகளில் மின்மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 25 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பேரூராட்சியில் உரிய அனுமதி பெறாமல், முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றதாக 5 வீடுகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த பணியின் போது, பெண்ணாடம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, பரப்புரையாளர்கள் தமிழ்மொழி, நந்தினி, சபீனா பேகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story