பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்


பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Feb 2019 3:45 AM IST (Updated: 3 Feb 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகளை முதன்மை கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், பெண் கல்வி, இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு குறித்து அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 1 முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் பள்ளி அளவிலும், அதைத்தொடர்ந்து ஒன்றிய அளவிலும் நடத்தப்பட்டன.

அதில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் சிவகங்கையில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தொடங்கி வைத்தார்.

போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களிலிருந்து சுமார் 200 மாணவ–மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை படிப்பவர்கள் முதல் பிரிவாகவும், 6 முதல் 9–ம் வகுப்பு வரை படிப்பவர்கள் 2–வது பிரிவாகவும், 9 முதல் 12–ம் வகுப்பு வரை படிப்பவர்கள் 3–வது பிரிவாகவும் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளை உதவித்திட்ட அலுவலர் பாஸ்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story