நெல்லை அருகே இரட்டைக்கொலை:2 வாலிபர்கள் கோர்ட்டில் சரண் பரபரப்பு தகவல்கள்


நெல்லை அருகே இரட்டைக்கொலை:2 வாலிபர்கள் கோர்ட்டில் சரண் பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 3 Feb 2019 4:30 AM IST (Updated: 3 Feb 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே நடந்த இரட்டைக்கொலையில் போலீசாரால் தேடப்பட்ட 2 வாலிபர்கள் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்லை,

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி பிள்ளை. இவருடைய மகன் சுடர்மணி (வயது 23). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசும்பொன் நகரை சேர்ந்த சின்னத்துரை பாண்டியன் மகன் கணேசன் (25). நண்பர்களான இவர்கள் 2 பேரும் சென்னையில் லாரி டிரைவர்களாக வேலை செய்து வந்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் செல்வம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுடர்மணி, கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அதன்பிறகு சுடர்மணி, கணேசன் இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். அதாவது எதிரிகள் தங்களை பழிக்குப்பழியாக கொலை செய்து விடுவார்கள் என்று கருதி திருப்பூர் மற்றும் சென்னையில் தங்கியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் மீதான கொலை வழக்கு நெல்லை கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜராக 2 பேரும் நேற்று முன்தினம் வீரவநல்லூருக்கு வந்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி இரவில் பத்தமடை அருகே கான்சாபுரத்தில் உள்ள தாத்தா சாமிநாதன் வீட்டுக்கு சுடர்மணி சென்றார். உடன் கணேசனையும் அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் வீட்டின் முன்பு அமர்ந்து 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அரிவாள், வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து சுற்றி வளைத்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் சுடர்மணியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. மேலும் கணேசனையும் வெட்டினர். ஆனால் அவர் லேசான வெட்டுக்காயங்களுடன் வீட்டின் பின்புறமாக உள்ள தோட்டத்துக்குள் ஓடினார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரையும் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், சேரன்மாதேவி துணை சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுடர்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசன் உடல் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக சுடர்மணியும், கணேசனும் கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது, சுடர்மணியின் உறவுக்கார பெண் ஒருவருடன் கிளாக்குளத்தை சேர்ந்த பழனி மகன் செல்வம் (25) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழகி வந்துள்ளார். இதுகுறித்து எச்சரித்தும் செல்வம் பழகுவதை நிறுத்தவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த சுடர்மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து செல்வத்தை கொலை செய்ய முடிவு செய்தார்.

வாட்டர் கேன் விற்பனை செய்து வந்த செல்வம் மேலப்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் செல்வத்தை வீட்டுக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக சுடர்மணி, கணேசன் ஆகிய 2 பேரையும் கொலை செய்ய செல்வத்தின் அண்ணன் புலிக்குட்டி என்ற மகேஷ் தரப்பினர் திட்டம் தீட்டினர். இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராவதற்காக சொந்த ஊருக்கு 2 பேரும் வந்திருப்பதை அறிந்து, அவர்களை கொலை செய்ய தக்க தருணத்தை எதிர்நோக்கி இருந்தனர். அவர்கள் 2 பேரும் இரவில் கான்சாபுரத்தில் உள்ள சுடர்மணியின் தாத்தா வீட்டுக்கு வந்திருப்பதை உறுதி செய்தனர். பின்னர் புலிக்குட்டி மகேஷ் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் கான்சாபுரத்துக்கு சென்று, சுடர்மணி, கணேசன் ஆகியோரை பழிதீர்த்து விட்டு தப்பி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த புலிக்குட்டி மகேஷ் (29), மேலச்செவலை சேர்ந்த லட்சுமண காந்தன் (25) ஆகிய 2 பேரும் நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் உத்தரவிட்டார்.

இதையடுத்து புலிக்குட்டி மகேஷ், லட்சுமண காந்தன் ஆகிய இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதுதவிர கொலையில் தொடர்புடைய மற்ற 4 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு முன்னீர்பள்ளம் அருகே கீழச்செவல் நயினார்குளம் கிராமத்தில் செல்லக்குட்டி, வேல்சாமி ஆகிய 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே பகுதியில் மேலும் 2 பேர் பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட சுடர்மணிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்த ரத்னம் (19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ரத்னம் பிரசவத்துக்காக டவுனில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சுடர்மணி கொலை செய்யப்பட்டு உள்ளார். 

Next Story