கவர்னர் கிரண்பெடியின் செயல்பாட்டால் மாநில மரியாதை குறைகிறது நாராயணசாமி வேதனை
கவர்னர் கிரண்பெடியின் செயல்பாட்டால் மாநிலத்தின் மரியாதை குறைகிறது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து பல அரசு அலுவலகங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்து டெல்லிக்கு அனுப்பி வருகிறார். அவர் ஆய்வுக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட துறை செயலாளர், அமைச்சர்கள் இல்லாமல் செய்கிறார். அவர் எதற்காக செல்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. கவர்னர் வேலை எழுத்தர் வேலை போல் அல்ல.
கவர்னர் அரசு துறைகளில் ஏதாவது கேட்கவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பவேண்டும். அவர் அமைச்சருடன் கலந்து ஆலோசித்து பதில் அளிப்பார். விதிமுறைகளை மீறி அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை மிரட்டுவது, பழிவாங்குவது அவரது வேலையல்ல.
இதுதொடர்பாக விளக்கி அவருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் அவர் திருத்திக்கொள்வதாக இல்லை. எனவே நானும் அவருக்கு அறிவுறுத்துவதை நிறுத்துவதாக இல்லை. கவர்னர் காவல்துறையின் 3–ம் நிலை அதிகாரி போன்று நடக்கக்கூடாது. அவருக்கான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளம்பரத்தில் கவனமாக உள்ளார். அவர் வெளியில் செல்லும்போது 3 கேமிராவுடன் சினிமா படப்பிடிப்புக்கு செல்வதுபோல் செல்கிறார். அவர் என்ன நடிகரா? அவரது செயல்பாடு மாநிலத்தின் மரியாதையை குறைக்கிறது. நான் சொன்னாலும் அவர் கேட்பதில்லை.
மத்திய மந்திரி இடைக்கால பட்ஜெட் போட்டு உள்ளார். ஆனால் நாங்கள் முழு பட்ஜெட் போட திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.