கவர்னர் கிரண்பெடி இலவச நலத்திட்ட உதவிகளை எதிர்ப்பது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி


கவர்னர் கிரண்பெடி இலவச நலத்திட்ட உதவிகளை எதிர்ப்பது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி
x
தினத்தந்தி 3 Feb 2019 4:15 AM IST (Updated: 3 Feb 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடி இலவச நலத்திட்ட உதவிகளை எதிர்ப்பது ஏன்? என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. மத்திய பட்ஜெட் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஏழை, எளிய, நடுத்தர, விவசாய, மீனவ, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்கு பயன்தரும் பட்ஜெட்டாக உள்ளதை புதுவை அ.தி.மு.க. வரவேற்கிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும், அனைத்து தரப்பு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக இது உள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவது அவர்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றும் செயலாகும். ஜெயலலிதாவின் நீண்ட நாளைய கோரிக்கையான விவசாயத்துறையில் இருந்து பிரித்து மீனவர்களுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவர்களின் நலனுக்காக கிடைத்த வெற்றியாகும். இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

சிறுதொழில் புரிவோருக்கு வட்டி கடனில் 2 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பது சிறுதொழில் புரிவோர் நலனுக்கு உகந்ததாகும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் என்பது மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் நீடித்த வாழ்வுக்கு உதவிடும் திட்டமாகும். தனிநபர் வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர மக்களுக்கு ஏற்புடையதாகும்.

ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள் காலம் கடந்து அறிவிக்கப்பட்டிருந்தாலும் பாராட்டுக்குரிய அற்புதமான பட்ஜெட் ஆகும். மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளையும் பாராட்டியுள்ள கவர்னர் கிரண்பெடி புதுவை மாநிலத்தினுடைய பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு இலவச நலத்திட்ட உதவிகளை எதிர்ப்பது ஏன்? என்பதை அவர் உணரவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

கம்யூனிஸ்டு எம்.எல். செயலாளர் சோ.பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்த பட்ஜெட்டில் கல் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி 3.40 சதவீதத்தில் இருந்து 3.37 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி தனியார் மயமாவதை மேலும் ஊக்குவிக்கும் போக்கு தெரிகிறது. இதேபோல் எரிசக்திக்கான செலவினத்தையும் 1.88 சதவீதத்தில் இருந்து 1.58 சதவீதமாக குறைத்தே ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.

எனவே இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கானதல்ல. ஊரக கிராமிய வளர்ச்சியை மையப்படுத்தப்பட்டதல்ல. கல்வி வளர்ச்சிக்கானதல்ல. சுருங்க சொன்னால் இந்த பட்ஜெட் முன்னேற்றத்தின் திசை அறியா வெற்று மாயையேயன்றி வேறெதுவுமில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் சோ.பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.

1 More update

Next Story