உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க பெண்கள் குவிந்தனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. உத்தமபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போடி, உத்தமபாளையம் தாலுகாக்களில் வசிக்கிற பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் மற்றும் புதிய வாகனங்கள் பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் 2-வது கட்டமாக, மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பதாரர்கள், ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு, உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் விண்ணப்பத்தை கொடுத்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 200 பெண்கள் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.
தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்ததால் தேனி, உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் சேவை முடங்கியது. இதனால் விண்ணப்பதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தினமும் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வார்கள். ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஒரே நாளில் அதிகம் பேர் விண்ணப்பித்ததால் ஆன்லைன் சேவை பாதிக்கப்பட்டது என்றார்.
Related Tags :
Next Story