அங்கன்வாடி பணியாளர்கள் 1,451 பேருக்கு செல்போன் தளவாய் சுந்தரம் வழங்கினார்


அங்கன்வாடி பணியாளர்கள் 1,451 பேருக்கு செல்போன் தளவாய் சுந்தரம் வழங்கினார்
x
தினத்தந்தி 2 Feb 2019 11:00 PM GMT (Updated: 2 Feb 2019 9:03 PM GMT)

குமரி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 1,451 பேருக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு விலையில்லா செல்போன்களை அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கினார். அந்த வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் 1,401, மேற்பார்வையாளர்கள் 50 பேர் என மொத்தம் 1,451 பேருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டன.

பின்னர் தளவாய்சுந்தரம் பேசியபோது, “முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை மெருகேற்றும் வகையிலும், அங்கன்வாடி பணியாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி குழந்தைகள் வளர்ச்சி பணியில் சிறப்பாக ஈடுபடுவதற்காகவும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு விலையில்லா செல்போன்கள் அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் செயல்படுகிறது. செல்போன் பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தங்களது பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்“ என்றார்.

முன்னதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசுகையில், “அங்கன்வாடி பணியாளர்களின் பணிகளை குறைக்கும் வகையில் செல்போன் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது மிகவும் பெருமை அளிக்கிறது. குமரி மாவட்டத்தில் எந்த குறைபாடுகளும் இல்லாமல் குழந்தைகள் பிறக்க அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் செல்போன் மூலம் தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் உறுதி செய்து சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்“ என்றார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சியம்மாள், ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியுஸ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் மற்றும் ஜெயச்சந்திரன், சுகுமாறன், ரபீக், விக்ரமன், ஜெயசீலன், தோவாளை ஒன்றிய முன்னாள் தலைவர் லதா ராமச்சந்திரன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story