கட்டணம் செலுத்தாததால் மகளிர் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு
கட்டணம் செலுத்தாததால் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்,
உத்தமபாளையத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்படுகிறது. இங்கு கம்பம், ராயப்பன்பட்டி, கூடலூர், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் குடும்ப பிரச்சினை, வரதட்சணை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகள் குறித்து விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் நேரில் வரமுடியவில்லை என்றால் தொலைபேசி மூலம் புகார் செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண்ணை எழுதி வைத்துள்ளனர். இதில் தொடர்பு கொண்டு பெண்கள், குழந்தைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக தொலைபேசி செயல்படவில்லை.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்தாததால் இணைப்பை துண்டித்து விட்டனர் என்றனர். தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தொலைபேசி கட்டணத்தை முறையாக செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொலைபேசி கட்டணம் செலுத்தாததால் உத்தமபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில், 2-வது முறையாக இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story