வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை கணவர் கைது; மாமனார்- மாமியாருக்கு வலைவீச்சு
அம்பை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மாமனார், மாமியாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அம்பை,
அம்பை அருகே உள்ள இடைகால் கலிதீர்த்தான்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் சுரேஷ் (வயது 31). கூலி தொழிலாளி. இவருக்கும், விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி வடக்குத்தெருவை சேர்ந்த ஜெயபால் மகள் ஆர்த்திகாவுக்கும் (27) கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே சுரேஷ், செல்லத்துரை, அவருடைய மனைவி குழந்தை தெரசா ஆகிய 3 பேரும் சேர்ந்து, ஆர்த்திகாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்த்திகா கர்ப்பம் அடைந்து, பிரசவத்திற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தையை பார்க்க சுரேஷ் மற்றும் அவருடைய பெற்றோர் வரவில்லை.
மேலும் ஆர்த்திகாவை வீட்டிற்கு அழைத்து செல்லவும் வரவில்லை. இதையடுத்து ஜெயபால் தனது மகளை குடும்பம் நடத்த அழைத்து செல்லுமாறு சுரேசிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், ஜெயபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என கூறினாராம்.
இதுகுறித்து ஆர்த்திகா அளித்த புகாரின் பேரில், அம்பை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர். மேலும் செல்லத்துரை, குழந்தை தெரசாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story