நாகர்கோவில்-வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி


நாகர்கோவில்-வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Feb 2019 4:15 AM IST (Updated: 3 Feb 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஏராளமானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளும், ரெயில் பயணிகள் சங்கம் மற்றும் மக்களும் கோரிக்கை விடுத்தனர். அதை ரெயில்வே நிர்வாகம் ஏற்று நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயிலை சனிக்கிழமை தோறும் இயக்க முடிவு செய்தது.

அதன்படி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று மாலை 5 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் நெல்லை, கோவில்பட்டி, மதுரை, திருச்சி நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது. மறுமார்க்கமாக, அதாவது வேளாங்கண்ணியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணிக்கு ரெயில் புறப்பட்டு புதன்கிழமை காலை 7.55 மணிக்கு மீண்டும் நாகர்கோவில் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரெயிலில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். ரெயிலை பொது மக்கள் கையசைத்து வழியனுப்பி வைத்தனர். அவர்களுக்கு ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன், குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஏசு ரெத்தினம், கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹில்லாரியூஸ், ரெயில் பயணிகள் சங்க மாநில துணை தலைவர் ரெஜிசிங் உள்ளிட்டோர் இருந்தனர்.

ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் கூறும்போது, “வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இதன்மூலம் வேளாங்கண்ணி பேராலயத்தை காண செல்பவர்கள் சுலபமாக செல்ல முடியும்“ என்றார்.

இந்த சிறப்பு ரெயிலை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி நிரந்தரமாக இயக்க பயணிகள் ஆதரவு தர வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story