முதல்-அமைச்சர் பெயரில் போலி நியமன ஆணை கொடுத்து வாலிபர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது வனத்துறை ஊழியர்களா? அதிகாரிகள் விசாரணை


முதல்-அமைச்சர் பெயரில் போலி நியமன ஆணை கொடுத்து வாலிபர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது வனத்துறை ஊழியர்களா? அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 3 Feb 2019 3:30 AM IST (Updated: 3 Feb 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் பெயரில் போலி நியமன ஆணை கொடுத்து வாலிபர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது ஊழியர்களா? என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை, 

வடமதுரை ஏ.வி.பட்டி சங்கர்களத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ்குமார் (வயது 21), எஸ்.பூசாரிபட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (27). இவர்களிடம் தேனி மாவட்டத்தை சேர்ந்த வைரம், பாஸ்கரபாண்டியன் ஆகியோர் தங்களை வனத்துறை ஊழியர்கள் என கூறி அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர் வனத்துறையில் தங்களால் வேலை வாங்கி தரமுடியும் என கூறி இருவரிடமிருந்தும் ரூ.7 லட்சத்து 90 ஆயிரத்தை பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் முதல்- அமைச்சர் அனுப்புவது போல் பணி நியமன ஆணையை தினேஷ்குமார், காளிமுத்து ஆகியோரிடம் வழங்கினர்.

அதில் வருகிற மார்ச் 6-ந் தேதி இருவரும் பணியில் சேர்ந்துகொள்ளலாம் என்றும் மேற்படி பணிக்கான செலவு தொகை ரூ.4 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேனி மாவட்ட வன அலுவலரின் கையொப்பம் இடம்பெற்று இருந்தது. இதனால் சந்தேகமடைந்த வாலிபர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இருவர் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புகார் கூறப்பட்டவர்கள் தேனி வனத்துறையில் ஊழியர்களாக வேலை செய்கிறார்களா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story