அ.தி.மு.க. பேனர்களை அகற்ற கோரி காத்திருப்பு போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி மயக்கம்
அ.தி.மு.க. பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி காத்திருக்கும் போராட்டம் நடத்தினார். அப்போது அவர் திடீரென்று மயக்கம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோவை,
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சில நாட்களுக்கு முன்பு கோவை வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். இதைதொடர்ந்து அவை அகற்றப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை வந்த அவர் கோவையின் சூயஸ் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தார். நேற்றுக்காலை 9.30 மணியளவில் அவர் கோவை அண்ணா சிலை சிக்னல் அருகில் வந்தார். அப்போது அங்குள்ள சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனரை அகற்ற அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் வலியுறுத்தினார்.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மத்திய பகுதி உதவி கமிஷனர் சுந்தரராஜன், ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் அங்கு வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனரை அகற்றுமாறு கூறினார். அதன்பேரில் அந்த பேனரை போலீசார் அகற்றினார்கள். இதையடுத்து, டிராபிக் ராமசாமி ஹுசூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றுமாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.க. பேனர்களையும் போலீசார் அகற்றினார்கள்.
அதன்பின்னர் இதய தெய்வம் மாளிகையின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த 2 பேனர்களையும் எடுக்குமாறு டிராபிக் ராமசாமி கூறினார். அதற்கு போலீசார், அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதற்காக இன்று தான் அந்த பேனர்கள் வைக்கப்பட்டது என்று கூறினார்கள்.
அதை டிராபிக் ராமசாமி ஏற்றுக்கொள்ளாமல் அந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் டிராபிக் ராமசாமி கேட்கவில்லை. அந்த 2 பேனர்களையும் அகற்றும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று கூறி காலை 10 மணி முதல் 12 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதில் அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு டிராபிக் ராமசாமி முடியாது என்று கூறி அங்கேயே படுத்திருந்தார். உடனே போலீசார் அவருடன் வந்தவர்களிடம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்கள்.
இதைதொடர்ந்து அவருடன் வந்தவர்கள் டிராபிக் ராமசாமியை குண்டு கட்டாக தூக்கி காரில் ஏற்றி சென்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மதியம் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தினால் கோவை அ.தி.மு.க. அலுவலகம் எதிரே நேற்றுக்காலை சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story