டேன்டீயில் பணியாற்றும் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தகவல்


டேன்டீயில் பணியாற்றும் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2 Feb 2019 9:56 PM GMT)

டேன்டீயில் பணியாற்றும் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதாக ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் கூறினார்.

கூடலூர்,

நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள அரசு தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணிக்காலத்தில் அரசு தேயிலை தோட்ட கழக(டேன்டீ) குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். ஆனால் பணி ஓய்வு பெற்றவுடன் அவர்களை குடியிருப்புகளை காலி செய்யுமாறு டேன்டீ நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது. குறைந்த சம்பளத்தில் வாழ்நாள் முழுவதும் பணியாற்றி விட்டு வயதான காலத்தில் வீடு இல்லாமல் அவர்கள் நிர்கதியாக நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் டேன்டீயில் பணியாற்றும் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் டேன்டீயில் பணியாற்றும் தாயகம் திரும்பிய மக்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த 1964-ம் ஆண்டில் கையெழுத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய இந்திய வம்சா வழியினருக்கு தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளால் வேலை வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொள்ள நிலமும், நிதியும் வழங்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில்(டேன்டீ) பணி அமர்த்தப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு வேலை வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இதுவரை சொந்த வீடு வழங்கப்படவில்லை. அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணியில் உள்ளவர்கள் மட்டும் குடியிருப்புகளில் தங்கி வருகின்றனர். அவர்கள் பணி ஓய்வு பெற்றவுடன் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறினால் மட்டுமே பணிக்கொடை வழங்கப் படுகிறது.

இதனால் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வீடு இல்லாமல் வயதான காலத்தில் தவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் மூலம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கில் டேன்டீயில் பணியாற்றும் தொழிலாளர்கள் 2,500 குடும்பத்துக்கும் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை மறுவாழ்வுத்துறை, நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் டேன்டீ நிர்வாகம் விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட்டு நீதிபதி வின்சென்ட் கோத்தாரி மற்றும் நீதிபதி அனிதா சுமந்த் ஆகியோர் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் டேன்டீயில் நிரந்தரமாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட பட்டா மற்றும் வீடு வழங்குவதற்கான சாதகமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளனர். இந்த உத்தரவை 3 மாதத்தில் இறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story