ஆசிரியர்கள் இடமாற்றம்: மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம்


ஆசிரியர்கள் இடமாற்றம்: மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2 Feb 2019 9:59 PM GMT)

ஆசிரியர்கள் இட மாற்றம் காரணமாக மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.

கூடலூர்,

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ- ஜியோ) 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்களில் ஊழியர்களும், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களும் பணிக்கு வரவில்லை. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டது. மேலும் காலக்கெடுவும் விதித்தது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்யும் பணி தொடங்கியது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் மட்டும் அதிகபட்சமாக 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இதுதவிர 350-க்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 9 நாட்களுக்கு பிறகு வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசின் காலக்கெடு முடிந்த பிறகு பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 486 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

இதை கண்டித்து பல இடங்களில் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கூறியதாவது:- பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பணியிட மாறுதல் செய்யப்படுகின்றனர். புதிய ஆசிரியர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையே உடனடியாக புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு நிலவி வந்தது. புதிய ஆசிரியர்களால் தேர்வு காலங்களில் மாணவ-மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே அரசு பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, அந்தந்த பகுதியிலேயே ஆசிரியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story