பொன்னேரி அருகே ரூ.28 கோடி அரசு நிலம் மீட்பு


பொன்னேரி அருகே ரூ.28 கோடி அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 2 Feb 2019 10:15 PM GMT (Updated: 2 Feb 2019 9:59 PM GMT)

பொன்னேரி அருகே ரூ.28 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த தச்சூர் வருவாய் கிராமத்தில் அடங்கியது சென்னீவாக்கம் கிராமம். இங்கு 7 ஏக்கர் 14 சென்ட் பரப்பளவில் நீர் நிலையான இரட்டை குளம் அமைந்துள்ளது. இந்த குளத்து புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 18 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னீவாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை ஆதாரமாக உள்ள இரட்டைகுளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதை அகற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் நீர்நிலையான குளத்தை அழித்து வீடுகள் கட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி ஆர்.டி.ஓ. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிட்டார்.

இதனையடுத்து பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் தலைமையில் தாசில்தார் புகழேந்தி, துணை தாசில்தார்கள் அருள்வளவன், செல்வகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்று 18 வீடுகளையும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றி ரூ.28 கோடி மதிப்பிலான 7 ஏக்கர் 14 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர். சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், பாலசுப்பிரமணி, வெங்கடேசன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

18 பேருக்கும் தலா 2 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு மாற்று இடம் வழங்க உள்ளதாகவும் அந்த இடத்திற்கு பட்டா, சாலை, குடிநீர், மின் வசதி ஆகியவை செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவம் சென்னீவாக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story